பரமக்குடியில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களை இரவு நேர ரோந்து போலீசார் கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காளிதாஸ் பள்ளிக்கூடம் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இரவுநேரங்களில் வீடுகளில் வெளியே நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் வசூல் செய்து சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் திருடிய கும்பல் சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் வழக்கம் போல இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடி உள்ளனர்.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து இந்த பகுதியில் பெட்ரோல் திருட்டு நடைபெற்று வருவதாகவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருக்கும் போது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.