மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை வெட்ட முயன்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான விகாஸ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2016 – ஆம் ஆண்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரனின் மகன் சிவபிரவீன் மற்றும் அவரது உறவினரான ஜெயமுருகன் ஆகிய 2 பேரும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக செங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது விகாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது விகாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் திடீரென சிவபிரவீன், ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் வெட்ட முயன்றனர். இதனால் சிவபிரவீனும், ஜெயமுருகனும் சுதாரித்துக்கொண்டு திரும்பி ஊருக்கு வந்துள்ளனர். இதுகுறித்து சிவபிரவீன் மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் அங்கிருந்தவர்களிடம் முறையிட்டனர். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த விகாஸ், விஜய் ஆகிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் விஜய் மற்றும் விகாஸ் ஆகிய இருவரையும் கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து விகாஸ் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் காவல்துறையினர் விகாசை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு விகாசை அனுப்பி வைத்தனர். அங்கு விகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் விஜய்யின் உடலை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.