திருப்பூரில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி நாயக். இவரது மகன் ஜட்டு நாயக்(33). இவர் அவிநாசி அருகே முத்து செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது நண்பருக்கு போன் செய்து இனிமேல் எனக்கு திருமணம் ஆகாது எனவே நான் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக ஜட்டுநாயக் இருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு அறையில் மயங்கி கிடந்த ஜட்டுநாயக்கை மீட்டு அவரது நண்பர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் ஜட்டுநாயக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.