காவல்துறையினர் வாகனம் மீது வாலிபர்கள் மதுபோதையில் பீர் பாட்டிலை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையில் ராயக்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆற்றங்கரையில் மணி, விஜய், ஜெயசீலன் என்ற மூன்று வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனம் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற விஜய், ஜெயசீலன், மணி ஆகிய 3 பேரும் பீர் பாட்டிலை வீசியுள்ளனர். இதனால் வாகனத்தின் கண்ணாடி உடைந்து விட்டது. மேலும் அந்த 3 வாலிபர்களும் காவல்துறையினரை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வாகனத்தின் டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயசீலன் மற்றும் விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.