பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வார சந்தையில் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் இருக்கும் சந்தை மேட்டில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது.
அதன்பின் இங்கு முக்கிய பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும். இதனையடுத்து தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வார சந்தையில் விவசாயிகள் அதிக அளவிலான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆனால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் காணும் பொங்கல் தினம் அன்று கடைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணத்தினால் வெளி மாநில மற்றும் மாவட்ட வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகை தந்துள்ளனர். இருப்பினும் தற்போது இந்த சந்தையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் சந்தை நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.