தடுப்பூசி போட்டதில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு விஜயலட்சுமி தனது குழந்தையுடன் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கு தடுப்பு ஊசி போட்ட பிறகு தாய், சேய் இருவரும் வீட்டிற்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றபோது, அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரையின்படி குழந்தையை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டனர். அப்போது மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்த குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாக தான் இருந்துள்ளது என்றும், தடுப்பு ஊசி போட்டதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் பகுதியில் வசிக்கும் வெற்றிமாறன் தம்பதிகளுக்கு இரண்டரை மாத ஆண் குழந்தையை மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து இரவில் தூங்கிய குழந்தை காலை அசைவில்லாமல் இருப்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.