சீரம் இன்ஸ்டியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விநியோகமானது இன்று முதல் துவங்குகிறது.
கொரோனா தடுப்பூசியான, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டீட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை சீரம் நிறுவனத்திடம் நேற்று அளித்துள்ளது. இந்த ஆர்டரை எச்.எல்.எல் லைப்கேர் லிமிடட் என்ற பொதுத்துறை நிறுவனம், மத்திய சுகாதார துறை அமைச்சகம் சார்பில் அளித்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசியின் விலை 200 ரூபாய் ஆகும். அதோடு ஜி.எஸ்.டி யுடன் சேர்த்து மொத்தம் ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூபாய் 210 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசி கொள்முதல் ஆர்டரை மத்திய அரசு வழங்கியதை அடுத்து, புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மூன்று லாரிகளில் மருந்துகளை அனுப்பும் பணியை தொடங்கி விட்டது.