தடுப்பூசி செலுத்துவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் டாக்டர்களும், செவிலியர்களும் தங்களுக்கு வேண்டிய நபர்களை வரவழைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.
இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வந்த 200 டோஸ் தடுப்பு ஊசி மருந்துகளில் 70 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளூரில் வசிக்கும் நபர்களுக்கு செலுத்த பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 130 டோஸ் தடுப்பூசி மருந்துகள் சம்பந்தமில்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு போடப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமில்லாமல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.