தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்களை பிடித்து புது முயற்சியாக காவல்துறையினர் அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்துகின்றனர். அதன்படி தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்த காரணத்திற்காக சுமார் 90 பேருக்கு அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் இந்த புது முயற்சியை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.