அஸ்ட்ராஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா வைரஸை அளிப்பதற்காக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தான் உலகிலேயே முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து கடந்த 16-ஆம் தேதி முதல் இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் முதியவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜப்பான் அரசு அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை தற்போது அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்காக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களுக்கு பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் இரண்டு தடுப்பூசிகளும் ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.