சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களை தொற்றிலிருந்து காத்துக்கொள்ள கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளில் ஒன்றைப் போட்டுக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமி பட்டியிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அப்போது அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி போடுவதற்காக மீண்டும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்துள்ளனர்.
அப்போது நுழைவுப்பகுதியில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தகவல் பலகை ஒட்டி இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரண்டு நாட்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தடுப்பூசி இல்லை என்று அலைகழிக்கிறீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.