சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, வளவனூர் விக்கிரவாண்டி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வானூர், கோட்டகுப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பூங்காக்கள் என மொத்தமாக 600 இடங்களில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதாரத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு 18 – வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் மாவட்ட ஆட்சியர் டி. மோகன், நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, பொறியாளர் ஜோதிமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளார். நடத்தப்பட்ட இந்த முகாம்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 986 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது.