ரஷ்யாவின் சுகாதாரத்துறை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஓமிக்ரோன் வைரஸை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் சமீபத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அது அதிக ஆபத்துடையது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
எனினும், இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் சுகாதாரத்துறையானது, ஸ்புட்னிக்-வி மற்றும் ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிகள், இந்த வைரஸை எதிர்த்து, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று கூறியிருக்கிறது.
மேலும், இந்த தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை அழிக்கக்கூடிய திறன் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா எத்தனை வகையாக உருமாற்றம் அடைந்தாலும், அவற்றை எதிர்க்கும் திறன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளுக்கு இருக்கிறது. எனவே, தேவைப்படும் பட்சத்தில், லட்சக்கணக்கில் பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவுள்ளோம் என்று ரஷ்யா கூறியிருக்கிறது.