கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது
உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதும். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதுமாக இருந்து வருகின்றனர். மக்களும் ஊரடங்கு காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் ஐநா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்று பரவி வருவதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு டிப்தீரியா, தட்டம்மை, போலியோ போன்றவற்றிற்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள் போடாமல் போவதற்கான ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை நிறுத்தி வைத்துள்ளனர். 25 நாடுகள் தட்டம்மை தடுப்புசி போடும் முகாம்களை ஒத்தி வைத்துள்ளனர். இந்த கொரோனா தொற்று தோன்றுவதற்கு முன்னரே ஒரு வயதுக்குட்பட்ட 2 கோடி குழந்தைகள் தட்டம்மை, போலியோ போன்றவற்றின் பல்வேறு தடுப்பு மருந்துகளை பெரும் வாய்ப்புகளை இழந்துள்ளன.
இப்போது கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்தை கொடுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால் இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதை தாண்டியும் குழந்தைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் டிப்தீரியா, தட்டம்மை, போலியோ போன்றவை பேரழிவை ஏற்படுத்துவதற்கான அச்சம் இருந்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
யுனிசெப் அமைப்பின் முதன்மை ஆலோசகரும் தலைமை நோய் தடுப்பாளருமான ராபின் நந்தி கூறுகையில், “இதுவரை இல்லாத அளவில் குழந்தைகளின் நலன் தொங்கலில் உள்ளது. உலக அளவில் தொற்று பரவும் நிலையில் குழந்தைகளின் உயிரை காக்கும் தடுப்பூசிகள் வழங்கும் பணி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை கொடுக்காவிட்டால் பல்லாயிரம் கோடி பிஞ்சு உயிர்களின் தலையெழுத்து பெரும் சிக்கலாகிவிடும்” என குறிப்பிட்டார்