தேனியில் வடமாநில தொழிலாளர்கள் இ-பதிவின்றி கேரளாவிற்கு செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் வருசநாட்டிலிருக்கும் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்திருக்கும் தனியார் எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சம்பளம் குறைவாக இருந்ததால் அவர்கள் கேரளாவிற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கிருந்து கிளம்பி கேரள எல்லையை ஒட்டியிருக்கும் குமணன் தொழுவிற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து வேறு வாகனம் கிடைக்காமல் அங்கேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன், அங்கு விரைந்து வந்த போலீசார் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதாவது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெள்ளிமலை எஸ்டேட்டுக்கே செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் அங்கேயே காத்திருந்தனர். இதனையடுத்து ஆண்டிபட்டியினுடைய தாசில்தார் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து முறையாக இ-பாஸ் எடுத்து அதன் பின் கேரளாவிற்கு செல்லுங்கள் என்று கூறியபின் அனைவரும் வெள்ளிமலை எஸ்டேட்டுக்கே திரும்பி சென்றனர்.