செல்போன் திருடிய வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கினர். அதன்பின் செல்போனை பறிகொடுத்த வாலிபர் மற்றும் அங்கிருந்த 4 பேர் சேர்ந்து வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வடமாநில வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபரை நள்ளிரவில் இந்த கும்பல் மருத்துமனையில் புகுந்து வெளியே அழைத்து வந்து அவரது கை, கால்களை கட்டி சரமாரியாக தாக்கி விட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகில் வீசிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வடமாநில வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வடமாநிலத்தை சேர்ந்த நமன்முண்டோ என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் யாரிடம் செல்போன் பறிக்க முயன்றார்? அவரை தாக்கியது யார் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.