வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறிமுதல் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் வட மாநிலத்தில் வசிக்கும் சஜல்மண்டல் என்பவர் குடியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜல் மண்டல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சஜல் மண்டலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணம், செல்போனை கேட்டுள்ளனர்.
அதனை சஜல் மண்டல் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி அவரிடமிருந்த ரூ.2000 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் சஜல் மண்டல் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சஜல் மண்டலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் மங்கலம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மணிகண்டன், சக்திவேல், ரவிக்குமார் என்பதும், 3 பேரும் சேர்ந்து வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறித்து சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.