நீண்ட கால பகையை மறந்து நடிகர் சிங்கமுத்து, மீண்டும் வடிவேலுவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் வடிவேலு, ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் சேர்ந்து நடிகர் சிங்கமுத்துவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி, ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பைப் பெறும்.
ஆனால் கடந்த 2007 ஆம் வருடத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்துவிற்கு இடையில் நிலமோசடி தகராறு ஏற்பட்டது. எனவே, இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. மேலும், நடிகர் வடிவேலு, சிங்கமுத்துவை நேரில் பார்ப்பதற்கும் விரும்பவில்லை.
இவர்களுக்குள் இருக்கும் நீண்டகால பிரச்சனையை தீர்க்க பலரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் எந்த பலனும் கிடைக்காமல் போனது. இந்நிலையில், தற்போது பிரபல இயக்குனர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரிடமும் பேசி அவர்களை இணைக்க முயற்சித்து வருகிறார். இந்த முயற்சிக்கு பாதி வெற்றி கிடைத்திருக்கிறது.
அதாவது, நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவுடன் இணைந்து நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால் வடிவேலு சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை. அப்படி சம்மதித்தால், மீண்டும் ரசிகர்களிடையே இவர்களின் காம்போ மிகப்பெரிய வரவேற்பை பெறும்.