மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன அல்லாபுரம் கே.கே நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணசாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணசாகர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சித்தேரி கூட்ரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நரசிம்மன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ண சாகரின் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது யாசின், ரகீம், பகத்பாஷா என்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.