வாடகை தொகையை வழங்க வேண்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த சட்டமன்ற தேர்தல் பணிக்காக 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் வாகனங்களுக்கு உரிய வாடகை தொகை வழங்கப்படாமல் உள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு மற்றும் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கிய வாகனங்களுக்கான வாடகை தொகையை வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.