அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் ரோடு பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன் என்பவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வெங்கிட்டாபுரம் தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ராகுலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாகேந்திரனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.