Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி… தீவிர ஆலோசனையில் பொதுப்பணித் துறையினர்..!!!

தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66 அடியாக இருந்தது. இதனால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 7,408 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததால் அணை நீர்மட்டம் 67.68 அடியாக உயர்ந்தது.

இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக உள்ளது. இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணை இன்று முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் முழு கொள்ளளவை எட்டியவுடன், அதன்பின் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். அந்த உபரி நீரை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது என்பது குறித்து பொதுப்பணித் துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |