வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது.
இந்நிலையில் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முருக்கோட்டை, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.