பி.ஏ.பி. தண்ணீர் வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பி.ஏ.பி. பாசனம் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. இந்த பாசனம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்த பாசனத்தில் இரண்டாம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடைஎண் 38 இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 25 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதனையடுத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத வகையில் தனிநபர் அரணி வாய்க்காலை சேதப்படுத்தியதால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், இளநிலை பொறியாளர் விஜயசேகர் மற்றும் அதிகாரிகள் வாய்க்கால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆகவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியபின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.