இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கியது. அடுத்தநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடந்தது. பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நேற்று பெருமாள் காட்சி அளித்தார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெருமாளை தரிசித்து வருகிறார்கள்.
தற்சமயம் வைகுண்ட ஏகாதசியின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. கோபுரங்கள் அனைத்தும் இரவு மின்னொளியில் ஜொலித்தது. சொர்க்க வாசலை கடந்து செல்லும் பக்தர்களுக்கு, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து காட்சி அளிக்கிறார். ஆயிரங்கால் மண்டபம் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள மணல் வெளியில் சுற்றி சுற்றி சேவை சாதிக்கும் இடத்தில் கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் நம்பெருமாள் உள்ளார்.
முக கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்பு அவர்கள் தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பின்பு அதிகாலை 5.12 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் பரமபத வாசலின் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். சொர்க்கவாசல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பகல் ஒரு மணிமுதல் இரவு மணி வரையிலும், 31ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி முதல் மட்டுமே திறந்திருக்கும். இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ஏழாம் திருநாளான 31ஆம் தேதி திருக்கை தளத்தில் நம்பெருமாள் சேவை செய்வார். எட்டாம் திருவிழா நாளான ஜனவரி 1ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான மூன்றாம் தேதி தீர்த்த வாரியும், நான்காம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. கொரானா நோய் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கோவில் வளாகத்திற்குள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இன்று 4:30 மணிக்குசென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மற்றும் திருநீர்மலையில் உள்ள நீர்வண்ணப்பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இதனைப் பல்வேறு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.