விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொறுத்திருந்த கட்சி கொடி, பம்பர்கள் போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பெயர்பலகை, கட்சி கொடிகள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வருகின்ற வாகனங்களில் பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள், கட்சி கொடிகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் போன்றவை இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவ்வழியாக வந்த 40-க்கும் அதிகமான வாகனங்களில் இருந்த ஒலிப்பான்கள், கட்சி கொடிகள், மற்றும் பம்பர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இதனையடுத்து வாகன ஓட்டுனர்கள் 43 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 9,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டு இருக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.