வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் புதிய காலனி பகுதியில் மதுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது அவர் வசிக்கும் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வீடு வீடாகச் சென்று மது பணம் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் மதுவை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக மது பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு பேப்பரில் எந்தெந்த தெருவில் எத்தனை ஓட்டு என்றும் எழுதி வைத்திருந்த சீட்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதுவை கைது செய்ததோடு அவரது சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 700 யும் பறிமுதல் செய்தனர்.