வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்கு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்கு ஏஜென்டுகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின் அதிகமான நபர்கள் அனுமதி சீட்டு பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
பின்னர் அவர்களுக்கு முறையான அனுமதிச் சீட்டுகளை வழங்காமலும், ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் மற்றும் வேண்டிய நபர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்கியதாக தெரியவந்துள்ளது. அதனால் மற்ற கட்சியினர் கோபமடைந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதன் காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.