வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகளுக்கு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகவர்களின் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த அறைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அலுவலர் அரிகிருஷ்ணன், வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் சண்முகநாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சி.சி.டிவி கேமராக்கள் மூலமாக வாக்கு எண்ணும் மையத்தில் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.