சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள வாழை மரங்களை வெட்டி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்தனர்.
இதுகுறித்து வாழை விவசாயி ஒருவர் கூறியபோது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், திருவிழா போன்ற நாட்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பணம் கொடுத்து வைத்திருப்பது வழக்கமாக இருக்கின்றது. இதனால் அந்த நாட்களில் தேவையான வாழை மரங்களை நாங்கள் முன்கூட்டியே பராமரித்து உற்பத்தி செய்து வாடிக்கையாளரிடம் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் வாழை மரங்களுக்கு முன்பதிவு செய்யாமல் இருந்தனர்.
அதன்பின் சதுர்த்தியை முன்னிட்டு சிலர் ஒரே நேரத்தில் வாழை மரங்களை வாங்குவதற்காக பதிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக வாழைமரங்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தற்போது எங்களால் போதிய அளவு வாழைமரங்கள் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் போது எங்களால் சரிவர வாழை மரங்களை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே நிகழ்ச்சிகளுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று விவசாயி தெரிவித்துள்ளார்.