அம்மன் சிரசை மர்மநபர்கள் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்றுவருவது வழக்கம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி இந்த திருவிழாவை நடத்துவதற்கான முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் இடையில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
எனவே அவர்கள் திருவிழாவை நடத்த இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டி மேல்பட்டி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதால் கிராமமக்கள் கெங்கையம்மன் சிரசை அங்கிருந்து எடுத்துச் சென்று அருகில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பான முறையில் வைத்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மன் சிரசு திடீரென மாயமானதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை மர்ம ஆசாமிகள் சுவரேறி உள்ளே குதித்து அம்மன் சிரசு கடத்திச் செல்லும் காட்சிகள் கோவிலில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.