வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அவரிடம் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு நிதி இல்லாததால் பணிகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுவதாக கலெக்டர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஊராட்சியில் 9.90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாரும் பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதில் 1௦௦ நாள் பணியாளர்கள் பணி நேரம் முழுவதும் பணி செய்வதையும், அதிக வயதானவர்களுக்கு வேலை வழங்கப்படும் போது அவர்கள் பணி செய்வார்களா என்பதை உறுதி செய்து பணி வழங்கிட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 8.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கலெக்டர் பார்வையிட்டுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் இல்லாமல் இருந்ததை பார்த்த கலெக்டர் பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டுள்ளார்.மேலும் கட்டுமான பணிகள் தரமானதாக இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.