புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும் அதே பகுதியில் இருந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெங்கடேசன் உண்ணாமலைபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் வெங்கடேசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதி, சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.