ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக மாணவிக்கு கேரள மாநில இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியில் வசிக்கும் நியாஷ் என்பவர் மாணவிக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதனால் காவல்துறையினர் நியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நியாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் நியாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.