பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சித்தம்பலம் பகுதியில் சிவசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தந்தை கார்த்திக்கிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என கண்டித்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் மீண்டும் தனது லேப்டாப் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை சிவசுப்ரமணியம் கார்த்திக்கிடம் நான் சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறாய் என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்திக் அவரது அறைக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை . அதன்பின் அவரது பெற்றோர் ஜன்னல் வழியே பார்த்தபோது கார்த்திக் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர் கார்த்திக்கை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். ஆனால் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.