பெற்றோர் திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நூக்காம்பாடி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜயின் பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனையடுத்து விஜயை சாப்பிடவைத்து விட்டு சுப்பிரமணியும் கவிதாவும் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் இருந்த விஜய் அவரின் வீட்டை ஓட்டியுள்ள ஷீட் போட்ட வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சுப்பிரமணியும் கவிதாவும் வீட்டிற்குள் வந்துபார்த்த போது ஷீட் போட்ட வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் விஜயை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் விஜயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.