முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர்.
இதில் ஆனந்தராஜ் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த ராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அனந்தராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்த ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தினேஷ்குமார், மகேந்திரன், ஹரிபிரியன், செண்பகராஜ் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தினேஷ்குமார் தரப்பினருக்கும் அனந்தராஜுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் தகராறு ஏற்பட்ட போது தினேஷ்குமார் தரப்பினர் ஆனந்தராஜை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.