வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாபிரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து செய்யது அலி தனது தொழிலுக்காக பல நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதன் இடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக செய்யது அலி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது அறையில் இருந்துள்ளார். அப்போது அறையில் இருந்து வந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தபோது செய்யது அலி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் செய்யது அலியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி சாபிரா கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.