கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயகிபுரத்தில் பாலு என்பவர் கொத்தனாராக வசித்து வருகின்றார். இவருக்கு 3 மனைவிகள் இருக்கின்றனர். இதில் முதல் மனைவி வசந்தாவுக்கு சஞ்சய்காந்தி, புயல் ராஜன் என்ற 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சலி தேவிக்கு ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்ற 2 மகன்களும், 3-வது மனைவி ரஷ்யாவுக்கு சிந்துஜா என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தனிக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இவர்களில் வசந்தா உயிரிழந்துவிட்டார். இதில் வசந்தாவின் மகன் சஞ்சய்காந்திக்கு திருமணம் முடியவில்லை. இவர் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில் அடிக்கடி மது போதையில் உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால் பாலுவும், அஞ்சலிதேவியும் மனமுடைந்து மயிலாடுதுறையில் வசித்து வந்தனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டிக்கு தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக பாலுவும், அஞ்சலிதேவியும் மயிலாடுதுறையிலிருந்து வந்துள்ளனர். அப்போது அங்கு மது போதையில் இருந்த சஞ்சய்காந்தி எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என்று பாலுவையும்,அஞ்சலி தேவியையும் தாக்கியுள்ளார். இதில் பாலும் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவரையும் அஞ்சலிதேவியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சஞ்சய் காந்தியின் சகோதரர் புயல்ராஜன், மற்றொரு சகோதரர் பிரபாகரன் ஆகிய இருவரும் சஞ்சய்காந்தி வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்தி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சஞ்சய் காந்தி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், வீரபரஞ்சோதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சய் காந்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து புயல்ராஜன், பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.