வாலிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி காளிக்கவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் பேசிக்கொண்டிருந்த 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் வினோத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன்பின் வினோத்குமார் கொலை வழக்கில் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பழனிச்சாமி, சதாம் உசேன், மாதவன் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த முரளி, கலீல், லாலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தக் கொலை வழக்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியபோது கடந்த ஆண்டு கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி செல்லதுரையை கொலை செய்தது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி பழனிச்சாமி, ஜான் வசூர் ராஜா உட்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஜான் மற்றும் செல்லத்துரை ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் அதிகரிக்க தொடங்கியது. இதனிடையில் செல்லத்துரை கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி பழனிச்சாமி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதன் காரணமாக செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனை அறிந்த பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் முந்திக்கொண்டு செல்லத்துரையின் ஆதரவாளரான வினோத்குமாரை கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் வேறு காரணங்கள் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.