ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் வாலிபர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரம் நாட்டாமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியிலிருந்து பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் மீண்டும் வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குள்ளம்பட்டி அருகில் உள்ள கரடு பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மணிகண்டன் தலையில் யாரோ மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்ததோடு, அவரது வயிறு, கை, கால் போன்ற இடங்களில் மது பாட்டிலால் குத்தி இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர். இதனிடையில் தனிப்படை காவல்துறையினர் குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அருணாச்சலம் கூறியதாவது “கடந்த 3-ஆம் தேதி இரவு நானும் எனது நண்பன் திருமலையும் குள்ளம்பட்டிக்கு சென்றோம். அதன்பின் அங்குள்ள டாஸ்மாக் கடையில் நாங்கள் 2 பேரும் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அதை குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியில் வந்த மணிகண்டன் எங்களிடம் லிப்ட் கேட்டதால் அவரை ஏற்றிக்கொண்டு குள்ளம்பட்டி கரடு பகுதியில் மது அருந்துவதற்காக சென்றோம்.
அங்கு மணிகண்டனை நாங்கள் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தோம். ஆனால் அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நாங்கள் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தோம். அதுமட்டுமின்றி மது பாட்டிலை உடைத்து மணிகண்டனை குத்திக் கொலை செய்தோம். இதனைதொடர்ந்து நாங்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டோம்” என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பின் அருணாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கின்ற திருமலையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.