முன்விரோதம் காரணமாக வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் டிசிகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரிவாசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இதனையடுத்து ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நாகேந்திரனுக்கும், கிரிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவமடைந்த கிரிவாசன் தான் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் நாகேந்திரனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகேந்திரன் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைபார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக நாகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரிவாசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.