வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் தினேஷும் அவரது உறவினருமான கோபி என்பவரும் கலந்து கொண்டனர். அதன்பின் விழா முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் தினேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி உதவி கேட்டுள்ளனர்.
அதன்பின் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷ், கோபி ஆகிய இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 500 ரூபாய் ஆகியவை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தினேஷ் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் பன்னியூர் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அருந்ததிபாளையம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, பிரசாந்த் என்பதும் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விஷ்ணு மற்றும் பிரஷாந்த் ஆகியோரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழிப்பறியில் ஈடுபட்ட மற்றொரு நபரான பெருமாள் கோவில் பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.