வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் ரோடு பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோனைமுத்துவை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சோனைமுத்து சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ராயர்பாளையம் பகுதியில் வசிக்கும் கருப்புசாமி, அருள்குமார், பாக்கியராஜ் மற்றும் புக்கான் மூர்த்தி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கருப்புசாமி, அருள்குமார், பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனையடுத்து தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான புதுச்சந்தை பகுதியில் வசிக்கும் புக்கான் மூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் புக்கான் மூர்த்தி மீது 50-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.