வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கொத்தவாசல் பெரிய தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், அவருக்கு அமலி ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் தனக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1/2 லட்ச ரூபாயை தன்னிடமிருந்து வாங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் இதுவரை வேலை வாங்கித் தராமல் இருந்து வருகின்றனர். அதன்பின் பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆதலால் எனது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வினோத்குமார் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து புகார் மனுவை பெற்ற காவல்துறை சூப்பிரண்டு இது தொடர்பாக காவல்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மோசடி செய்திருப்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் அமலி ஜாஸ்மின் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.