மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரிசில்லா என்ற மனைவி உள்ளார். இவர் முத்தாண்டிபாளையம் பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்நிலையில் பிரிசில்லா காரணம்பேட்டையிலிருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் பிரிசில்லாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பிரிசில்லா காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.