வாலிபருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிகான்பட்டி கிராமத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் துபாயில் இருந்து தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இதில் அவர் அங்கிருந்து கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்று வந்துள்ளார். அதன்பின் சென்னை வந்ததும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து அவர் அங்கிருந்து திருப்பத்தூர் அருகில் இருக்கும் அவரின் சொந்த ஊரான கும்மிடிகான்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் வீட்டில் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். பிறகு அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக கூறி வந்த தகவலின் அடிப்படையில் அவரை அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தி வைத்துள்ளனர்.
பின்னர் பரிசோதனை முடிவில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவரின் குடும்பத்தில் இருக்கும் தந்தை, தாய், மனைவி ஆகியோரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கிராமம் முழுவதும் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு மற்றும் கொரோனா தடுப்பூசி போடாத நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.