அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கார்டன் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி பணி முடிந்து ஜெயலெட்சுமி தனது சகோதரர் ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெயலட்சுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் செயினை பறித்துச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் எண்ணை சிலர் கவனித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் அவினாசி பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரும் அவரது நண்பரும் செயின் பறிப்பு நடந்த தினத்தன்று டாஸ்மாக் மதுக்கடை எதிரில் உள்ள சாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றனர். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அனுப்பர்பாளையம் சத்யா நகர் பகுதியில் வசிக்கும் சக்குபாய் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக அவினாசிலிங்கம்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சக்குபாய் அணிந்திருந்த செயினை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அவினாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.