பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வலிப்பு நோய் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோபாலசமுத்திரம், கொத்தன்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை காவலரான கபிலன் என்பவர் கடந்த 18-ஆம் தேதி கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த சக காவல்துறையினர் கபிலனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கபிலனின் உடலுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினார். மேலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தேசிகாபுரம் பகுதியில் கபிலன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மரகதம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகிலன் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.