துருக்கி நாட்டில் மீட்புக்குழுவினருடன் சேர்ந்த ஒருவர் தன்னைத்தான் தேடுகிறார் என்பதை கூட அறியாமல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த முட்லு என்ற 50 வயதுடைய நபர், தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வழிதவறி காட்டுக்குள் போய் விட்டார்கள். இந்நிலையில் முட்லுவின் மனைவி தனது கணவரை வெகு நேரமாகியும் காணாததால் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மீட்புக்குழுவினர் இவரை தேடி காட்டு பகுதிக்குள் சென்றனர்.
இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒருவர் தானும் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்வதாக கூறி அவர்களுடன் இணைந்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் மீட்புக்குழுவினர் தன்னைத்தான் தேடுகிறார்கள் என்று தெரியாமல் முட்லு தான் இப்பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இவரின் நடவடிக்கையானது சந்தேகப்படும்படி இருந்ததினால் மீட்புக்குழுவினர் இவரது பெயரை அழைத்துள்ளனர். அதற்கு முட்லு ‘நான் இங்கு தான் உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
அதன்பின் மீட்புக்குழுவினர் முட்லுவை விசாரித்துள்ளனர். அதில் முட்லு ‘தனக்கு கடுமையான தண்டனை வழங்கிவிடாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து முட்லுவை அவரது மனைவியிடம் மீட்புக்குழுவினர் சேர்த்துள்ளார்கள். மேலும் இவரிடம் காவல் துறையினர் ஏதும் அபராதம் வாங்கி உள்ளார்களா? என்பதை குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.